கட்சி துவங்கியபிறகு, அரசியல் தலைவர்கள் பலருக்கும் வாழ்த்து தெரிவித்த விஜய், முதன்முறையாக வாழ்த்து சொன்னது தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்குத்தான். ஆம், மார்ச் ஒன்றாம் தேதி மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு ஸ்டாலின் அவர்களுக்கு என் இனிய பிறந்த நாள் வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன் என்று எக்ஸ் தளத்தில் பதிவிட்டார் விஜய். பிற்காலத்தில் அரசியல் எதிரியாக அவர் அறிவித்ததே திமுகவைத்தான். இப்படியாக, முதல்வருக்கு வாழ்த்து கூறியது கவனம் ஈர்த்தது.
தொடர்ந்து, பொதுத்தேர்வு எழுதும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு வாழ்த்து கூறியவர், புதுச்சேரி, முத்தியால்பேட்டையைச் சேர்ந்த 9 வயதுச் சிறுமி, பாலியல் துன்புறுத்தலால் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து, நடவடிக்கை தேவை என வலியுறுத்தினார். மார்ச் 7ம் தேதி கட்சியின் மாநில பொறுப்பாளர்கள் நியமன அறிக்கை வெளியானது. அடுத்ததாக, மார்ச் 8ல் உறுப்பினர் சேர்க்கைக்கான செயலியை துவங்கி, அதில் தானே முதல் உறுப்பினராக இணைந்து, கட்சியின் கொள்கை பிடித்திருந்தால் சேர்ந்து உடன் பயணிக்குமாறு வீடியோ வெளியிட்டார். இப்படியாக, தவெகவில் இணைந்த உறுப்பினர்களின் எண்ணிக்கை 1 கோடியை தாண்டிவிட்டதாகவும் கட்சி தரப்பில் கூறியுள்ளனர்.